Wednesday, November 21, 2007

சிந்தனை


கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசித்தார். புத்தரின் போதனையால் பலனடைந்த பலர் அவருடைய சங்கத்தில் சேர்ந்து சிஷ்யர்கள் ஆயினர், புத்தர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடியது. அவ்வாறு அவர் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள ஓர் மண்டபத்தில் பெருங்கூட்டத்தினிடையே போதித்துக் கொண்டிருந்தார். அவ்வூரில் இருந்த மனிதன் ஒருவனுக்கு புத்தரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர் புகழ் பாடுவது பிடிக்கவில்லை. புத்தர் ஒரு போலிச் சாமியார் என நம்பினான். புத்தர் போதனை செய்த இடத்திற்குச் சென்று கூட்டத்தின் முன்னிலையிலேயே அவரைக் கண்டபடி அசிங்கம் அசிங்கமாகத் திட்டத் தீர்த்தான். புத்தரின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கும் புத்திரின் சீடர்களுக்கும் அந்த மனிதன் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது, அவனை ஒரு வழி பண்ண வேண்டும் போல் தோன்றியது. ஆனால் புத்தரோ அமைதியான முகத்துடன் அம்மனிதன் திட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தார், அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தன் சீடர்களுக்கு சைகை செய்தார். அம்மனிதன், தன் வெறுப்பை கொட்டித் தீர்த்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் மனதை ஏதோ ஒன்று குத்துவது போல் இருந்தது. தான் இவ்வளவு வசைபாடியும் புத்தர் என்றழைக்கப்படும் அந்த மனிதர் அமைதியே உருவாக விளங்கியதை நினைத்ததும் அவனுக்கு வெட்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
அடுத்த நாள் முதல் வேளையாக புத்தர் சபைக்குச் சென்று அவர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினான். புத்தரின் மகிமையை தான் புரிந்துகொண்டதாகவும், தான் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் கூறி தன்னை மன்னித்து விடும்படி வேண்டினான். அதற்கு புத்தரோ, “நான் உன்னை மன்னிக்க முடியாது” என்று அவனைப் பார்த்துச் சொன்னார். அந்த மனிதனுக்கு, இவ்வார்த்தைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. சபையில் இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, நேற்று தான் புத்தர் புன்னகை பூத்த முகத்துடன் அமைதியாக இவன் திட்டுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார், இவனை ஒன்றும் செய்யவேண்டாம் என்றும் கூறினார், இன்று இவன் வந்து தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டும் அவனை மன்னிக்க முடியாது என்று கூறுகிறாரே என்று அனைவருக்கும் ஒரே குழப்பம். அப்போது புத்தர் பேசினார், “மகனே, நான் உன்னை மன்னிக்க முடியாது. ஏனெனில் நேற்று சபையில் வந்து திட்டியவன் நீயல்ல, அவன் நேற்றோடு முடிந்துவிட்டான், இன்று வந்திருக்கும் நீ அவனல்ல. நேற்று திட்டப்பட்டவனும் நானல்ல, இப்போது யார், யாரை மன்னிப்பது?” என்றார். மன்னிப்புக் கேட்டவன் மெய்சிலிர்த்துப் போனான்! பிறகென்ன, அவனும் சங்கத்தில் சேர்ந்தான், “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று பாடிக்கொண்டு ஜோதியில் கலந்தான்.
புத்தரின் மனம் தான் எவ்வளவு விசாலமானது. நம்மாலும் ஏன் புத்தரைப் போல் இருக்க முடியாது? நமக்கு ஒருவர் தீங்கிழைக்கும் போது அதனால் பாதிப்படைவதோ, அல்லது, அதை ஒதுக்கி மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதோ நம் கையில் தானே இருக்கிறது. அடுத்தவர் நமக்கு தீங்கிழைக்கும் போது நாம் ஒன்றும் இளிச்சவாயனாக அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லவில்லை. அவன் தன் தவறைத் திருத்திக்கொள்ள எவ்வகையல் நம்மால் முடியுமோ அவ்வகையில் உதவுவது நம் கடமை. ஆனால் அவன் செய்த தீங்குக்கு நாமும் பதிலாக அவனைப் பழி வாங்க நினைத்தால் அவனிடம் இருந்த காழ்ப்புணர்ச்சி எனும் வியாதி நம்மையும் தொற்றிக் கொண்டதாகிவிடும், அவனும் திருந்தமாட்டான். மேலும் அவன் நமக்குத் திருப்பித் தீங்கு செய்வதும், நாம் அவனை மறுபடியும் பழிவாங்குவதும் என இந்த சுழற்சி வளர்ந்துகொண்டே தான் போகும். யாராவது ஒருவர் நிறுத்த வேண்டும், நாமே அந்த வாய்ப்பை ஏன் முதல் முறையிலேயே பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்கை விட, அதை நாம் நினைத்துக் கொண்டு அவர் மீது காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக்கொள்வதே நம் மனதையும் உடலையும் ஆரோக்கியம் குன்றச் செய்யும். நம்பினால் நம்புங்கள், ஒரு மனிதருக்கு வரும் பெரும்பாலான வியாதிகள் அவர் காலம் காலமாக மனதில் தேக்கி வைத்திருக்கும் கோபம், தாபம், பேராசை, பொறாமை, வெறுப்புணர்ச்சி போன்றவற்றையே காரணமாக கொண்டுள்ளன. முன்னே சொன்னது போல் மற்றவர் தன் தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம் மனதிலுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் களைந்து நம் புத்தியை தெளிவாக்கினால் தான் இந்த பழிவாங்கும் சுழற்சியை நம்மால் நிறுத்த முடியும்.
மற்றவர் நமக்கு என்ன கெடுதல் செய்தாலும், அதனால் பாதிப்படையக் கூடிய நிலையில் நாம் இருந்தால் அதற்கு நாம் தானே காரணம்? சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு? எதனாலும் பாதிப்படையாத உறுதியான மனிதனாக, சமூகமாக, நாடாக, இனமாக நாம் விளங்காவிட்டால் அது நம்முடைய தவறே ஆகும். ஒருவன் நமக்குத் தீங்கு செய்த பின் அவனைப் பழி வாங்குவதை விட அவன் அச்செயலைச் செய்யும் முன்பே நாம் நம்மை தற்காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அஹிம்சை போதித்த புத்தரே காட்டிற்கு தவம் செய்யச் சென்ற போது தம்மை காட்டு விலங்குகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக கையில் தடியுடன் சென்றார். இங்கு சொல்வதெல்லாம், நம் சக்திகளையெல்லாம் நம்மை உறுதியான, யாரும் தாக்க முடியாத, ஏதனாலும் பாதிப்படையாத மனிதனாக, சமூகமாக ஆக்கிக்கொள்வதிலும், தீங்கு செய்பவர் தம்மைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளித்து அதற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதிலும் செலவிடவேண்டுமே தவிர, நாமும் அவரைத் திருப்பித் தாக்கி நம்முடைய, மற்றும் அனைவருடைய அழிவுக்கும் வழிவகை செய்வதில் அல்ல.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.(திருக்குறள்: 314)
சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைப்பக்கத்தில் ஆப்பிரிக்க பழங்குடியனம் ஒன்றில் புழங்கும் ஒரு வித்தியாசமான சடங்கைப் பற்றிப் படித்தேன். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் ஏதாவது செய்து விட்டால் அவருக்கு தண்டனை வழங்கும் சடங்கு தான் இது. பழங்குடியினம் என்றவுடன் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பெரிய சட்டியை அடுப்பில் வைத்து, குற்றம் செய்தவனை அந்தச் சட்டியில் போட்டு சுட்டு மற்றவர் அனைவரும் இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவார்கள் என்பது போல் கற்பனை செய்ய வேண்டாம். இந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் குற்றம் செய்தவரை கிராமத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். கிராம மக்கள் அனைவரும் தத்தம் பணிகளை விட்டுவிட்டு குற்றம் செய்தவரைச் சுற்றி நின்று கொள்வார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக குற்றம் செய்தவரிடம் சென்று குற்றம் செய்தவர் முற்காலத்தில் தமக்குச் செய்த நல்ல காரியங்களை அவருக்கு நினைவு படுத்துவார்கள். இந்த சடங்கு சில நாட்களுக்கு நடக்கும். சடங்கு முடிந்த பின்னர் குற்றவாளியை மறுபடியும் சமூகத்தினுள் மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்வார்கள்.
இந்தப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது. இவர்களிடம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இங்கே குற்றம் செய்தவரை பாதிப்பு ஏற்படுத்தியவராக பார்க்காமல் பாதிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். குற்றம் செய்தவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை அவர் செய்த நல்ல காரியங்களை அவருக்கே நினைவுபடுத்துகிறார்கள்.
நாம் அனைவரும் தினந்தோறும் சின்னதாகவோ, பெரியதாகவோ ஏதாவது குற்றங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். நாம் குற்றமோ தவறோ செய்வதற்கான காரணம் குற்றம் புரிவதனால் கிடைக்கும் நன்மையினால் அல்ல. உண்மையில் நாம் குற்றம் புரிய காரணம் நம்முள் உள்ள ஏதோவொரு வெறுமையினால் தான். நல்ல மனநிலையில் இருக்கும் ஒருவரும் குற்றம் செய்வதில்லை. சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து நம் செயல்கள் மூலமும் எண்ணங்கள் மூலமும் பாதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரு குற்றம் நடக்கும்போது, அதற்கு ஒரு தனி மனிதனை குற்றம் சாட்டுவது சரியல்ல. சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ள வெறுப்புணர்ச்சி ஒருசில துரதிர்ஷ்டசாலிகள் மூலம் குற்றங்களாகவும் தீவிரவாதச் செயல்களாகவும் வெளிப்படுகிறது. இதற்கு குற்றவாளியை மட்டும் உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் உலகிலிருந்து குற்றம் போய்விடுமா? இந்த துரதிர்ஷ்டசாலிகளால் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படு வாய்ப்பிருக்கிறது என்றால் அவரை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்து அவருள் இருக்கும் வெறுப்புணர்ச்சியை போக்க ஏதாவது வழி செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே நமக்குள் சிறிதளவிலோ, பெரிதளவிலோ இருக்கும் வெறுப்புணர்ச்சியை களைந்துகொள்ளும் வரை எத்தனைபேரை தூக்கில் தொங்க விட்டாலும் சமூகத்தில் குற்றம் குறையாது.
இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்றோர் செய்யும் பணிகள் மகத்தானது. இவர்கள் தங்கள் யோக முறைகளை சிறைவாசிகளுக்கு கற்பித்து அவர்களை புது மனிதர்களாக்குகிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற யோக முறை ஒன்றை நானும் கடந்த சில வருடங்களாக பழகி வருகிறேன். யோகம் செய்வது மூலம் நமக்குள் உள்ள வெறுப்புணர்ச்சிகள் நீங்கி ஆனந்தமும் எல்லா உயிர்கள் மீது அன்பும் தோன்றும் என்பது உண்மை. சமூகத்தில் அன்பு தோன்றினால் குற்றங்களுக்கு இடம் ஏது? அன்பினால் காட்டு விலங்கான புலிகளையே கட்டுப்படுத்த முடியும்போது சமூக விலங்கான மனிதர்கள் எம்மாத்திரம்?
BY
US.SUNDARAM

1 comment:

Unknown said...

நண்பரே, என் சிந்தனைகளையும் பதிவையும் எதிரொளிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி! அவ்வாறு செய்யும்போது கூடவே என் பதிவுக்கு இணைப்பு ஒன்றையும் சேர்த்தீர்களானால் நலம்.

வாழ்க வளமுடன் :-)

ஸ்ரீநிவாசன்
http://srinig.wordpress.com/